Saturday, July 23, 2022

ஆதி மதமா, ஹிந்து மதமா? மூல புருஷர் யார்? ஸ்தாபகர் யார்? வேர் எது? வேத விஞ்ஞானம் சாத்தியமா ? மற்ற மதங்களை எங்கு வைப்பது ? வர்ணம் / ஜாதி / வர்ண மாற்றம் உண்டா ?

 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐



💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

மஹாஸ்வாமி அவர்களின் அமுத மொழியிலிருந்து....

ஆராய்ந்து பார்த்தால், ஹிந்து மதப் பிரிவுகளுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள எல்லா மதங்களுக்குமே மூலம் வேதம்தான் என்று தெரியும்.

நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும்போது இந்த மதத்துக்கு எந்தப் பெயருமே குறிப்பிடவில்லை

இதைப் பற்றி நினைத்தபோது எனக்கு ரொம்பவும் குறையாக இருந்தது.

அந்த ஆதி காலத்தில் இதை ஸ்தாபித்தவர் யார் என்ற கேள்வி வரும். பெயர் இல்லாத நம் மதத்தை யார் ஸ்தாபித்தார் என்று பார்த்தால், எத்தனை ஆராய்ச்சி செய்து பார்த்தாலும், அப்படி ஒரு ஸ்தாபகரைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பிரம்ம சூத்திரம் செய்த வியாசரைச் சொல்லலாமா, கீதை சொன்ன கிருஷ்ண பரமாத்மாவைச் சொல்லலாமா என்றால்,

அவர்களும் தங்களுக்கு முன்னரே இருக்கிற வேதங்களைப் பற்றிச்சொல்கிறார்கள். சரி, இந்த வேத மந்திரங்களைச் செய்த ரிஷிகளை ஸ்தாபகர்கள் என்று சொல்லலாமா என்று பார்த்தால், அவர்களோ ‘நாங்கள் இந்த வேதங்களைச் செய்யவில்லை’ என்கிறார்கள். ‘பின்னே உங்கள் பேரில் தானே மந்திரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன? ஒவ்வொரு மந்திரத்தையும் உபாசிக்கிறபோது அவற்றுக்கு உங்களில் ஒரு ரிஷியின் பெயரைச் சொல்லித்தானே தலையைத் தொட்டுக் கொள்கிறோம்?’ என்று கேட்டால், அந்த ரிஷிகள், எங்கள் மூலம்தான் இந்த மந்திரங்கள் லோகத்துக்கு வந்தன என்பது வாஸ்தவம். அதனால்தான் எங்களை மந்திர ரிஷிகளாகச் சொல்ல்யிருக்கிறது. எங்கள் மூலம் வந்ததே ஒழிய, நாங்களே அவற்றைச் செய்யவில்லை (Compose பண்ணவில்லை). நாங்கள் அப்படியே மனம் அடங்கித் தியான நிஷ்டையில் இருக்கிறபோது இந்த மந்திரங்கள் ஆகாயத்தில் எங்கள் முன்னே தெரிந்தன. நாங்கள் அவற…

சகல சப்தங்களும் ஆகாசத்திலேயே பிறக்கின்றன. அவற்றிலிருந்தே த்ருஷ்டி உண்டாயிற்று. இதைத்தான் Space-ல் ஏற்பட்ட vibration-களால் பிரபஞ்சம் உண்டானதாக ஸயன்ஸில் சொல்கிறார்கள். ரிஷிகள் தங்களது தபோ மகிமையால் இந்த சிருஷ்டியிலிருந்து ஜீவர்களைக் கடைத்தேற்றுகிற சப்தங்களை ஆகாசத்தில் மந்திரங்களாகக் கண்டார்கள். ஆனால் அவர்கள் செய்ததல்ல இம்மந்திரங்கள். புருஷர் எவரும் செய்யாத அபௌருஷேயமாக  இந்த வேதங்கள் ஆகாச ரூபமான பரமாத்மாவிலேயே அவரது மூச்சுக் காற்றாக இருந்தவை. அவற்றையே ரிஷிச்ரேஷ்டர்கள் கண்டு உலகுக்குத் தந்தார்கள்.


இப்படித் தெரிந்து கொண்டால் நம் மதத்தில் ஸ்தாபகர் யார் என்று தெரியவில்லையே என்பதும் ஒரு குறையாக இல்லாமல் அதுவே பெருமைப்படுகிற விஷயமாக இருக்கும். பரமாத்மாவின் சுவாசமாகவே இருக்கப்பட்ட வேதங்களை அனுஷ்டிக்கிற அநாதி மதத்தின் வாரிசுகளாக வந்திருக்கும் மகா பாக்கியம் நமக்குக் கிட்டியிருக்கிறது என்று பூரிப்பு அடைவோம்.


சரித்திர காலத்துக்கு முற்பட்டவர்கள் என்று வைக்கப்பட்ட பழங்குடிகளின் மதங்களில்கூட நம் சமய சின்னங்கள் இருக்கின்றன என்றால் என்ன அர்த்தம்? அத்தனை காலத்துக்கு முந்தி, நாகரிக வாழ்க்கையே உருவாகாத தூர தூர தேசங்களுக்கு இந்தியாவிலிருந்து படையெடுத்தோ வியாபாரத்துக்காகவோ போய் நம் நாகரிகத்தைப் பரப்பினார்கள் என்றால், அது பொருத்தமாகவே இல்லையே!

அதனால்தான் ‘இங்கிருந்து கொண்டுபோய் அங்கே புகுத்தவில்லை; ஆதியில் லோகம் முழுக்கவே வேத மதம்தான் இருந்திருக்க வேண்டும்’ என்று எனக்குத் தோன்றுகிறது. அப்புறம் அவை திரிந்து திரிந்து இப்போது அந்தந்த தேசத்து ‘ஒரிஜினல்’ மதங்களாக நினைக்கப்படுபவையாக ஆகி, பிற்பாடு அங்கும் சரித்திர காலத்துக்கு உட்பட்ட கிறிஸ்துவம், பௌத்தம், இஸ்லாம் ஆகியன பரவியிருக்க வேண்டும்.

(Note - Jewish scriptures have common sootras with Rg veda as per Mahaswami)

சித்தாந்த சைவர்கள் சிவபெருமான் அவதரித்ததாக ஒப்புக் கொள்வதில்லை. ஆதி சங்கர பகவத்பாதாள் ஈசுவராவதாரம், ஞானசம்பந்தர் முருகனின் அவதாரம் என்றெல்லாம் சொல்வதை அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். கர்ப்பவாசம் செய்வது, மாம்ஸ மயமான நரதேகத்தில் இருப்பது எல்லாம் ஸ்வாமிக்கு இழுக்கு என்பது அவர்களுடைய அபிப்பிராயம். 

அத்வைதிகளுக்கோ கர்ப்பவாஸம் செய்த மாம்ஸ சரரீரத்தில் இருக்கிற இத்தனை பேருமே ஸாரத்தில் பிரம்மம்தான். ஆகையால், ஈசுவராவதாரத்தில் அவர்களுக்கு நிஷித்தமாக எதுவும் தெரியவில்லை.

 ஸித்தாந்த ரீதியில் வைஷ்ணவர்களுக்கும் சைவர்களுக்கும் பல ஒற்றுமையிருந்த போதிலும், பிரம்மமேதான் ஜீவனாயிருக்கிறது என்ற அத்வைதத்தை வைஷ்ணவர்கள் அப்படியே ஒப்புக் கொள்ளாத போதிலும், வைஷ்ணவர்கள் யாவரும் அவதார கொள்கையை ஒப்புக் கொள்கிறார்கள். பொதுவாக லோக வழக்கிலும் அவதாரம் என்றாலே மகாவிஷ்ணுவின் தசாவதாரங்கள்தான் நினைக்கப்படுகின்றன. 

வைஷ்ணவர்கள் அவதாரங்களை ஒப்புக் கொள்வதற்குக் காரணம், பகவான் பரம காருண்யன் ஆனபடியால் ஜனங்கள் உஜ்ஜீவிக்கச் செய்வதற்காகத் தன்னை எவ்வளவு வேண்டுமானாலும் குறைவுபடுத்திக் கொள்வான் என்று அவர்கள் நம்புவதுதான்.


உள்ளுக்குள்ளே தான் ஸ்வாமியே என்று நன்றாகத் தெரிந்து கொண்டு, வெளியில் ஏதோ, மநுஷ்யன் போல் வேஷம் போடுவதால், அவருக்குக் கொஞ்சங்கூட தோஷமோ, குறைவோ வந்துவிடவில்லை.


மொத்தத்தில் ஹிந்து மதம் எனப்படும் வைதிக நெறி அவதாரக் கொள்கையை ஏற்கிறது என்றே சொல்லி விடலாம். ஏனென்றால், சைவர்களும் தங்களது முழுமுதற் கடவுளான சிவ பெருமான் அவதரிப்பதில்லை என்று சொன்ன போதிலும், மகாவிஷ்ணு தசாவதாரம் செய்ததாக ஒப்புக் கொள்கிறார்கள்.


பலவிதமான தேசங்கள், அவற்றில் பலவிதமான சீதோஷ்ண ஸ்திதிகள், அதற்கேற்ற பயிர் பச்சைகள், இவை எல்லாவற்றுக்கும் அநுகுணமாக பிற்பாடு ஒரு பண்பாடு என்று லோகத்தில் இருக்கிறது. இதில் எல்லாவற்றுக்கும் இடம் கொடுப்பதான வேதம்தான் ஆதியில் எல்லாவிடத்திலும் இருந்திருக்கிறது. பிற்பாடு அங்கங்கே ஜனங்களின் ஆசை அபிலாஷைகள் மாறி மாறி, அதிலிருந்தே அந்தந்தச் சூழலுக்கு ஏற்ற அநுஷ்டானங்களை உடைய வேறு மதங்கள் வந்திருக்கின்றன. அதனால்தான் எந்த மதத்தைப் பார்த்தாலும்—இப்போது அநுஷ்டானத்தில் இருக்கப்பட்ட மதங்கள், இந்த மதங்களுக்கு முன்னால் அந்த தேசங்களில் இருந்த பூர்வீக மதங்கள் இவற்றில் எதைப் பார்த்தாலும்—அதிலெல்லாம் வைதிக மதத்தின் அம்சங்கள், சின்னங்கள் இருக்கின்றன. பாரத தேசத்தில் மட்டும் அந்த ஆதி மதமே தங்கி விட்டது. 

அதற்கப்புறமும் அது காலத்தால் தனக்கு பிற்பட்ட மதங்களை கௌரவ புத்தியுடனேயே பார்த்திருக்கிறது. ‘அந்த அன்னிய ஜனங்களின் பக்குவத்தை ஒட்டியே இந்த அன்னிய மதங்கள் தோன்றியிருக்கின்றன. இவையே அவர்களுக்கு சிரேயஸைத் தரும்’ என்று கருதியிருக்கிறது. 

‘தான் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விடுவது’ (live and let live) என்று சொல்கிறார்களே அந்த உத்திஷ்டமான கருத்தே ஹிந்து மதத்தின் லட்சியமாக இருந்திருக்கிறது. அதோடுகூட மற்ற தேசத்தினருக்கு ஆத்மசிரேயஸ் அளிக்கக் கூடிய பௌத்தம், ஜைனம் முதலிய மதங்களையும் தானே பெற்றெடுத்து வெளி நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.


🙏🙏🙏🙏

சமூகம் society முழுவதற்குமான ஏற்பாடுதான் வர்ண தர்மம் என்பது. இப்போது ரொம்பவும் கண்டனத்துக்கு (criticism) ஆளாகியிருப்பது இந்த வர்ண தர்மம்தான். வர்ண தர்மத்தை ஜாதிப் பிரிவினை என்று பொதுவில் சொல்கிறார்கள். 

ஆனால் உண்மையில் வர்ணம் வேறு. ஜாதி வேறு. 

வர்ணங்கள் நாலுதான்; ஜாதிகளோ ஏகப்பட்டவை, பிராம்மணர் என்ற ஒரே வர்ணத்தில் அய்யர், அய்யங்கார், ராவ் என்று பல ஜாதிகள் இருக்கின்றன. நாலாவது வர்ணம் ஒன்றிலேயே முதலியார், பிள்ளை, ரெட்டியார், நாயக்கர் என்று பல ஜாதிகள் வருகின்றன. வேதத்திலும் (யஜுர் வேதம்—முன்றாவது அஷ்டகம்—நாலாவது ப்ரச்னம்) தர்ம சாஸ்திரத்திலும் பல ஜாதிகள் பேசப்படுகின்றன. அந்தப் பெயருள்ள ஜாதிகள் இப்போது இல்லை. 

அதெப்படியானாலும் ஜாதிகள் பல; வர்ணங்கள் நாலே நாலுதான். 

‘நம் மதத்துக்கே பெரிய களங்கம்; மநுஷ்யர்களிடையே உசத்தி-தாழ்த்தி என்று பேதம் கற்பிக்கிற பொல்லாத ஏற்பாடு’ என்று இப்போது நினைக்கப்படுகிற 

வர்ண தர்மம் என்ன என்று, 

நன்றாக பக்ஷபாதமில்லாமல் ஆராய்ந்து பார்த்தால், 

சமுதாய வாழ்வின் ஒழுங்குக்காகவே ஏற்பட்ட ஒப்பற்ற சாதனம் அது

 என்று தெளிவாகும்.

🙏🙏🙏🙏


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


தத்வமஸி. சிவோஹம். ஹரி ஓம்

(தொடரும்)


References -


Deivathin Kural Chapters containing the voice of clarity on vedic hinduism and vedic sciences..


https://www.kamakoti.org/tamil/part1kurall24.htm

https://www.kamakoti.org/tamil/part1kural43.htm

https://www.kamakoti.org/tamil/part1kural28.htm

https://www.kamakoti.org/tamil/part1kural29.htm

https://www.kamakoti.org/tamil/part1kural30.htm


No comments: