Tuesday, November 2, 2021

நரகாசுரனும் நகராசுரனும்... கல்கியின் கற்பனை... ஒரு நீட்சி!!

 


பல வருடங்களுக்கு முன் கல்கி எழுதிய ஒரு கற்பனைக்கதை இன்றும் பொருத்தமானது. நரகாசுரன் சென்னைக்கு வருகிறான், தனது வரத்தின்படி மக்கள் தனது தந்தை விஷ்ணுவின் ஆணைப்படி அரக்கத்தனம்  நீங்கி, பொய்மை, வஞ்சகம், குரூரம் நீங்கினார்களா என்று அறிய வருகிறான் (மஹாபலி ஓணத்துக்கு வருவதுபோல் ).

இங்கு அவன் பார்க்கும் காட்சி அவனை வியக்க வைக்கிறது. சென்னை மட்டுமல்லாமல் எல்லா உலக நகரங்களும் பெருத்து நரகத்தைவிட கொடுமையான மனித, உயிர் வாழ்க்கை களமாக மாறி இருப்பது அவனுக்கு புரியவில்லை. அவன் முதல் தீபாவளி அன்றே திருந்தி விட்டான். 

அவன் குழம்பிய குட்டையாய் நம் போல் நிற்கும்போது, நகராசுரன் அங்கு வந்தான். நகராசுரன், தானும் ஸ்ரீஹரியின் புதல்வனே என்றான். ஆனால் தன்னை விட கொடுமையான அரக்கர்களாக சென்னை வாசிகள் மாறிவிட்டனர் என்று வருத்தப்பட்டான். 

சென்னையின் குளங்களையும், ஏரிகளையும் அவை முன்னிருந்த இடங்களையும், நதிகள் சுருங்கி ஓடை போல் ஆன அவற்றையும், ஓடைகளும், நீர் பாசன மற்றும் வடிகால் ஓடைகள், கால்வாய்கள், ஏரிகள் போன்றவற்றை தேடித்தான் பிடித்தார்கள்.

எந்த பறவை இனமும் வாழமுடியாதபடி பார்த்து கொண்டு, இயற்கையான செடிகொடி மரங்களை அழித்து தனக்கு விருப்பமானவை மட்டும் வாழ்ந்தால் போதும் என்று மனிதன் உலகம் முழுவதும் ஆக்கி விட்டான் என்பதை பார்த்து மலைத்தான் நரகன். தான் செய்த கொடுமைகளை விட பல மடங்கு நடந்திருப்பதை பார்த்து வருத்தப்பட்டான்.

நாடுதான் இப்படி என்றால் காடும் அழிக்கப்பட்டு, மலைகள் முனை மழுங்கி மொட்டையாய் நிற்பதைப்பார்த்து விக்கித்துவிட்டான். திரிசூல மலை முன்பு கூட மலையை வெட்டி விட்டதை பார்த்தான். 

மலையை வெட்டி கோவில் கட்டினார்கள் முன்னோர், இவர்களோ கோவில் இருக்கும் மலை என்றும் பாராமல் வெட்டி தீர்த்தனர் என்று நொந்து கொண்டான்.

நகராசுரன் சொன்னான் - "நீ கற்பனை செய்ய முடியாதவற்றையும், நானே கற்பனை செய்யாதவற்றையும், செய்து விட்டார்கள் மனிதர்கள். மிகவும் கெட்டிக்காரர்கள்!!!!. மலைகளை, பள்ளத்தாக்குகளை தடுத்து அணைகள் கட்டினார்கள். அவை உடைந்தாலும் திரும்ப கட்டுவார்கள். கடல் வளம், நிலவளம், தாது வளம், நதி புனல் வளம், ஆகாய வளம் என எல்லாவற்றையும் சுரண்டி விட்டார்கள்..." 

"கடந்த 100-150 வருடங்கள் தான் இதில் பெருமையானது. 

மனிதன் மலை முழுங்கி மஹாதேவன் ஆனான். 

மற்றும், உலகம் முழுவதும் 10,000 திற்கு மேற்பட்ட உயிர் வகைகள் மொத்தமாகவே அழிந்து போயின. 

85% சதவிகிதம் காடுகள் அழிந்து விட்டன!!!!"

நரகாசுரன் மயங்கி விழுந்தான்!!!

பின்னர் மயக்கம் தெளிந்து உட்கார்ந்தான்..



நரகாசுரன் சொன்னான் - "நான் என்னவோ நினைத்தேன். நமது தந்தையும் தாயுமே வந்து என்னை கொல்ல முற்பட்டபோது, என்னிலும் கயவன் உண்டோ என்று எண்ணினேன், எதை செய்தால் ஸ்ரீஹரியின் புதல்வர்களாக நாம் இருப்போம் என்று நினைத்து  தீபாவளி ஒன்றை தந்தையிடம் கேட்டேன். அவரும் பூமி அன்னையிடம் உனது மகனும், மற்றவரும் திருந்த இது நல்லதுதான் என்றார். பூமி தேவியாகிய சத்ய பாமையும், பூமிநாதனும் எனக்களித்த வரம் இவ்வுலகைக்காக்கும் என்று நம்பினேன். பாழாய் போன பேராசையை இங்கு விட்டுத்தான் சென்றேன் போலும். மனிதர்கள் என் பேராசையை கெட்டியாக பிடித்து கொண்டு பூமிநாதன் உருவாக்கி, காத்து கொடுத்த பூமியை, அழிவின் விளிம்பிற்கு தள்ளி விட்டனர்... கலி முற்றித்தான் விட்டது." 

மேலும் சொன்னான், "தம்பி, நீ இங்கு வெகு காலம் இராதே. என்னுடன் பாழ் நரகம் வந்துவிடு. அங்கு தண்டனை முடிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் செல்லலாம்.
இங்கிருந்தால் விமோசனமே கிடைக்காது. பல வேதங்களில் சொன்னதுபோல், இப்பூமி அழிக்கப்படும் நாள் தொலைவில் இல்லை. எதற்கும், சத்ய லோகம் சென்று வேறு வழி இருக்கிறதா என்று கேட்டு பார்க்கிறேன். கலியுகத்தில் இங்கு வாழ்ந்த புனிதர் யாவருக்காவது வழி எதாவது புலப்படலாம், ஏனெனில் அவர்கள் இந்த பூமி மாந்தர்கள் திருந்துவார்கள் என்று நம்பித்தான் பல மாற்றங்களை செய்தனர். நல்வழிப்படுத்தினர். இனி அவர்கள் பாடு!!"

நகராசுரன் சொன்னான் - "நீ வருவதற்குத்தான் காத்து கொண்டிருந்தேன். என் வேலை இனிமேல் முடியாது. சிற்சில சௌகரியங்களுக்கு ஏற்பட்ட நகரத்தை சதமென நம்பி, உலகை அழிக்கும் வழியில் மாறி விட்ட இம்மாந்தரை மாற்ற நான் இங்கு வந்தது தவறு. நாலாவது ஜென்மத்திலாவது வந்த வேலை முடிந்து ஜெயா, விஜயாவாக ஸ்ரீவைகுண்டம் செல்லலாம் என்று  இருந்தேன். விதி வலிது!! வேண்டுமானால், கைலாசம் சென்று பரமசிவனிடம் கேட்போம்!!!" 

சகோதரர்கள் இருவரும் ஸத்ய லோகம் நோக்கி புறப்பட்டனர். வழியில் வ்ருஷ பானுவாகிய சூரிய தேவனையும் அழைத்து சென்றனர்... 

பின்னர் ஸ்ரீவைகுண்டம் சென்று, தங்களது தந்தையாகிய ஸ்ரீ ஹரியையும் அழைத்து கொண்டு கைலாசம் சென்றனர்.



கைலாசத்தில் சிவபிரான் கூறினார் - "இன்னும் 500 கோடி ஆண்டுகள் மிச்சமிருக்கும் போது பூமியை நாம் என் செய்வது? மற்ற மேலுலகங்களில் உள்ள புனிதர்களையும் அழையுங்கள். யோசித்து ஒரு முடிவெடுக்கலாம். பூமி மாந்தர்களின் தொல்லை மிகக்கொடுமைதான்!!!"



https://www.everythingconnects.org/the-environmental-crisis.html

https://en.wikipedia.org/wiki/The_Day_the_Earth_Stood_Still_(2008_film)

https://www.unep.org/news-and-stories/speech/solutions-planet-crisis

https://www.greenpeace.org/india/en/story/12135/people-and-planet-over-fossil-fuel-economies-need-support-to-meet-climate-commitments/

https://www.greenpeace.org/india/en/press/12075/who-strengthens-air-quality-guidelines-greenpeace-response/

https://www.livescience.com/ghastly-future-global-crises.html

https://nymag.com/intelligencer/2017/07/climate-change-earth-too-hot-for-humans.html

https://www.cbsnews.com/news/great-dying-permian-triassic-extinction-event-warning-humanity/

https://www.bbc.com/future/article/20210520-could-humans-really-destroy-all-life-on-earth

No comments: